Sunday, November 14, 2010

காய்கறிகள் தருமே முக வசீகரம்...


அழகை அழகாய் எடுத்து கூறும் வார்த்தை... வசீகரம். பார்த்ததுமே, பளிச்சென மனதை கவர்வது முகம் தான். முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள, அழகு நிலையத்தை தேடி ஓடுவது மட்டுமே முடிவல்ல.  காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம் என்கிறார், மதுரை ஆரப்பாளையம் அழகுக்கலை நிபுணர் வித்யாஸ்ரீ.

பால்... முகத்தின் அழுக்குகளை நீக்கும் உன்னதமான பொருள். பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும்.  துடைத்த பின், ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்க வேண்டும். இப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும். பேஸியல் செய்யும் போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.

 காய்கறிகளைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் வைத்து பேஸியல் செய்யலாம். உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து, அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டியை சேர்த்து கலக்க வேண்டும். முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி கலவையை பூசி, 20 நிமிடங்கள் காயவிட வேண்டும். நன்றாக காய்ந்துவிடக் கூடாது. இதேபோல மற்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.

பழங்களில் ஆஸ்திரேலிய ஆரஞ்ச், பட்டர் ப்ரூட், வாழைப்பழம், ஆப்பிள், கறுப்பு திராட்சை, பப்பாளிப் பழம், தர்பூசணி பழங்களை பயன்படுத்தலாம்.  செவ்வந்தி, பன்னீர் ரோஜா பூக்களையும், பாதாம் பருப்பு, வெள்ளை கொண்டைக் கடலையை அரைத்து, தேன், முல்தானிமெட்டி கலந்து பேஸியலாக பயன்படுத்தலாம். பூக்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம்.
எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம். மாலை நேரத்தில் செய்வதே நல்லது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செய்து பார்க்கலாம், என்கிறார் வித்யாஸ்ரீ. சந்தேகம் இருந்தால், 95974-68447க்கு ஹலோ சொல்லலாம். 

தினமலர் வாராந்திர பகுதி » ஹலோ தோழியே செய்தி - வித்யாஸ்ரீ (SVST Trust Member)  Dt:  November 14, 2010

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=2671&ncat=10