Wednesday, February 16, 2011

உடல் அழகுக்கு அரோமா தெரபி!



இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் எவ்வளவோ முன்னேறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இளமையிலிருந்தே அழகு மற்றும் உடல் நலம் பேணும் வழிமுறைகள் சரியாக கற்றுத்தரப் படவில்லை என்பது ஒரு குறைதான்.

வாழ்க்கையில் முன்னேறுவது மட்டுமல்லாது, உடல் அழகிலும், தோற்றத்திலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது, அவர்களின் முன்னேற்றத்திற்கு கூடுதலாக துணைபுரியும் என்பதே உண்மை. அப்படி தோற்றம் மற்றும் அழகை மேலும் அழகுபடுத்திக் கொள்ள அரோமா தெரபி பலவகைகளில் நமக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

பழங்காலத்தில் இலைகளையும், பூக்களையும் கொண்டே மருத்துவம் பார்த்தார்கள். அதற்கு ஆயுர்வேதம் என்று பெயர் வைத்தனர். அதை அடிப்படையாக கொண்டது அரோமா தெரபி.

இயற்கை கொடுத்த வரமான இலைகளும், பூக்களும் மருத்துவத்திற்கு மட்டுமின்றி, பெண்களின் அழகுக்கும் அழகு சேர்ப்பதை பழங்கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர். இந்த அரோமா தெரபி மூலம் அழகை அதிகப்படுத்தும் சிகிச்சைகளை மேற் கொள்ளலாம். இந்த சிகிச்சைக்கு பலவித தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தைலங்களை மூக்கின் அருகில் வைத்து நுகரச் செய்வது, உடலில் தேய்த்து மசாஜ் செய்வது ஆகியவை அரோமா தெரபியின் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறை, உடலுக்கு அழகை தருவதோடு மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அழகு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தைலங்கள், இயற்கையில் கிடைக்கும் பூக்கள், இலைகள், வேர்கள் ஆகியவற்றிலிருந்து சிறப்பான முறையில் ஸ்பெஷலாக தயாரிக்கப்படுகின்றன. முடி உதிர்வதைத் தடுப்பது, பொடுகை அகற்றுதல், இளநரை மற்றும் முதுநரையை நீக்குவது போன்றவற்றுக்கு அரோமா தெரபியின் மூலிகை எண்ணையைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் முகத்திற்கு பளிச்சென்ற அழகு கிடைக்கவும், சருமம் பளபளவென்று மின்னவும் ஹெர்பல் கிரீம்களையும், லோஷன்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த சிகிச்சைக்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், அரோமா தெரபி மூலம் கிடைக்கும் அழகு மற்றும் பயன்பாடுகள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும்.

முகத்தில் பருக்கள் மூலம் ஏற்படும் புள்ளிகளை நீக்கவும், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள் ஆகியவற்றை போக்கவும் அரோமா தெரபி சிறந்த சிகிச்சையாகும். முல்லைப் பூக்களை அரோமா தெரபியில் சரும பளபளப்புக்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்கி, படைகளை நீக்கி அழகுபடுத்தும் வேலையை முல்லைப் பூ செய்கின்றது.

அதே மாதிரி, ஆரஞ்சுச் சாறும் அழகுக்கான சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சந்தன எண்ணை சரும அழகுக்கு மிகப் பெரிய பலனை வழங்குகிறது. இதனை உடம்பில் தேய்ப்பதால் உடம்பில் சருமம் பளிச்சென மின்னும்.

மேலும் இது உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை தருவதால் உடல் அழகு முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. வறண்ட சருமத்தை உடையவர்களுக்கும், உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும் சந்தனத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அரோமா தெரபியில் கிரீம், தைலம், லோஷன் ஆகியவற்றை அழகின் தேவைக்கு தக்கபடி குறிப்பிட்ட அளவை, அதாவது தேவைக்கு ஏற்றவாறு கணக்கிட்டு பயன்படுத்துகின்றனர். அரோமா தெரபி சிகிச்சையைப் பெற அதற்குரிய மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.