Saturday, September 3, 2011

தர்மம் தலைகாக்கும்! தலைக்கவசம் உயிர்காக்கும்!

 "சின்னவனாய் நானிருந்து பெரியவனாய் ஆகும் போது, என்ன செய்வேன் நானென்று தெரியுமா? இது பாலர் பாடசாலைகளில் சிறுவர்களால் பாடப்பட்டு இன்றைய சிறுவன் இளைஞனாக மாறும் போது தன் பெற்றோரிடம் என்ன கேட்கிறான் என்ற கேள்விக்கு விடை ஒன்றாக தான் இருக்க முடியும். அது மோட்டார் சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை தான். அந்த வயதிற்கு நியாயமான ஆசை அது! 
 
மோட்டார் சைக்கிளில் பயணிப்பதென்பது அலாதியான அனுபவம் தான். ஆனாலும் வேகமாக செல்லும் பொழுது விபத்து ஏற்படுமாயின் அதிக பாதிப்பை தருவதும் இதே சவாரிதான். இதனால் தான் மோட்டார் சைக்கிள் பயணிகள் அனைவரும் தலைக்கவசங்கள் (Helmet) அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர். 
 
ஒரு விபத்தை சந்திக்கும் பொழுது குறிப்பாக மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெறும் பொழுது உடலின் எந்தப் பாகமும் பாதிப்படையலாம். ஆனாலும் தலைக்கவசம் அணிவது தலையை பாதுகாப்பதற்கு மட்டும் உதவும். மற்றைய உறுப்புகளுக்கு இல்லாத முக்கியத்துவம் தலைக்கு ஏன் வழங்கப்படுகிறது? விடை சுலபமானது. எமது கட்டளை தலைமை அலுவலகமான மூளையை பாதுகாப்பதற்காக தான்! 
 
தலைக்காயம் காரணமாக நூறாயிரம் பேரில் முந்நூறு பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த 300 பேரில் 9 பேர் சிகிச்சைகள் பயனற்று இறந்து விடுகிறார்கள். இந்த தரவுகள் அபிவிருத்தியடைந்த நாடான பிரித்தானியாவை சேர்ந்தவை. இலங்கையில் விஞ்ஞான முறையிலமைந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும் வைத்தியசாலை விபத்துச்சேவை பிரிவின் தகவற்படி இழப்பு வீதம் உயர்வாக காணப்படுகிறது. 
 
இயற்கையிலேயே மூளைக்கு தான் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுதியான மண்டையோட்டுக் கவசத்தினுள் மூளைய முண்ணாண் பாய்பொருள் (CSF-Cerebro spinal fluid) தாலாட்ட ஓரளவு சுயாதீனமாக தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மண்டையோடு ஒரு மூடிய அறையாக (Closed cavity) இருப்பதால் இவ்வறைக்குள் ஏற்படும் சிறு மாற்றங்களும்  மூளையை பெருமளவில் பாதிக்கும். மண்டையோட்டுக் குழியினுள் மூளை, மூளைய முண்ணாண் பாய்பொருள், குருதிக்கலன்கள் ஆகியன காணப்படும். இம்மூன்றினதும் கனவளவை பொறுத்துத்தான் மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் காணப்படும். இந்த அமுக்கம் மாறா நிலையில் பேணப்படுவது அவசியம். ஏனென்றால் இது மூளைக்கான் குருதிப்பாய்ச்சலை (perfusion pressure) தீர்மானிக்கும். இயற்கையான செயன்முறைகளால் மண்டையோட்டுக்குழியின் அமுக்கம் மிக நுட்பமாக பேணப்படுகிறது. விபத்தின் போது மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
 
·          நேரடி தாக்க விளைவு (Impact damage)
 
·          தாக்கத்தின் பின் ஏற்படும் பாதிப்புகள் (secondary brain damage) 
 
நேரடித்தாக்கம் என்னும் போது மோதல் காரணமாக மூளையத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் கருதப்படலாம். 
 
தாக்கத்தின் பின்னால் ஏற்படும் விளைவுளில் உள்ளக இரத்தப் பெருக்கை (internal hemorrhage) நாம் குறிப்பிடலாம். இவ்வகை குருதிப்பெருக்குகள் மிக ஆபத்தானவை. மூடிய மண்டையோட்டுக்குழியினுள் குருதியின் கனவளவு அதிகரிப்பானது அழுத்தம் (compression), விலகல் (brain shift) ஆகியவற்றின் மூலம் மூளையை பாதிக்கும் இந்த குருதிப்போக்கை மிக விரைவாக அகற்றப்பட வேண்டும். 
 
உடலில் அடிபடும் போது உடலின் பகுதிகள் வீங்குவது இயல்பு. இது போலவே மூளை வீக்கமடைகிறது (cerebral swelling). இந்த வீக்கம் காரணமாக ஏற்படும் மேலதிக அமுக்கம் பாதிப்படையாத ஏனைய முளையப் பகுதிகளுக்கான குருதியோட்டத்தை தடைப்படுத்தும். இதன் காரணமாக மூளை ஒட்சிசன் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் (cerebral ischemia). இந்நிலைமையில் மூளையத்தின் வீக்கம் மிக மோசமடையும். இதைவிட ஆபத்தான நிலைமை மூளைத்தண்டின் மீதான அழுத்தம் (brainstem compression). சாதாரணமாக பெரும் குடயத்தினூடாக (foramen magnum) பிதுங்கும் மூளையின் பகுதி மூளைத்தண்டை அழுத்தும். இந்த நிலமை இறப்புக்கு இட்டுச்செல்லக் கூடியது.
 
ஏனென்றால் மூளைத்தண்டுதான் இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற எண்ணிறைந்த செயற்பாடுகளுக்கு பொறுப்பாக உள்ளது. அதனால் இறப்பு என்பது பற்றிய புதிய வரவிலக்கணத்திற்கு "மூளைத்தண்டின் இறப்பு" எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. 
 
விபத்தொன்றின் போது வெளியே காயங்கள் இல்லாவிட்டால் கூட, விபத்தின் போது நினைவிழத்தல் (concussion), விபத்துக்கு பிந்திய மறதி (post-traumatic amnesia), முற்று முழுதான நினைவிழப்பு (coma) ஆகியவற்றில் ஏதும் காணப்பட்டால் அந்நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அனுமதித்து அவரை அவதானிப்பது விபத்தின் பின் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளை (complications) தவிர்க்க உதவும். 
 
வரும் முன்னே காப்பது சிறந்தது (prevention is better than cure) என்பது பழமொழி. தலைக்கவசம் அணிவதென்பது தலைக்காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க சிறந்த வழி. எமது பகுதியில் காவல்துறையை கண்டால் மட்டுமே  சிலர் தமது தலைக்கவசங்களை அணிந்துகொள்கின்றனர். அதுவும் வாகனம் செலுத்துபவர் மட்டும் கவசம் அணிய பின்னாலிருப்பவர்  'ஜாலி'யாக சும்மா இருக்கும் நிலையும் நிலவுகிறது. உண்மையிலேயே வாகனம் செலுத்துபவரை விட பின்னாலிருப்பவர்தான் அதிக பாதிப்பை விபத்தில் சந்திக்க நேரும். ஆகவே வாகனத்தில் ஏற்றப்படும் சகலரும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். 
 
அடுத்த வேடிக்கையான விடயம் என்னவென்றால் தொழிற்சாலைகளில் தொழிலாளர் பயன்படுத்தும் மெல்லிய இலேசான தலைக்கவசம் சில மோட்டார் சைக்கிளோட்டிகள் பயன்படுத்துவது தான். இச்சிறிய கவசங்கள் விபத்தின்  போது ஏற்படும் அதிர்ச்சியை தாங்க முடியாதவை. எனவே இவற்றை அணிவது காவல்துறையிடம் பிடிபடாமல் தப்ப உதவுமே ஒழிய விபத்துப் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு எந்த வகையிலும் உதவ மாட்டாது. 
 
தலைக்கவசம் அணியும் போது தலைக்கு அளவான தலையோடு சரியாக பொருந்துகின்ற கவசங்கள் அணிய வேண்டும். குருவியின் தலையில் பனங்காய் வைத்தது போல் தலைக்கு அளவற்ற கவசங்கள் பாவிப்பது நிறுத்தப்பட வேண்டும். கவசங்கள் அணியும் போது நாடியுடனான பட்டி சரியாக கொழுவப்பட வேண்டும். இல்லாவிட்டால் விபத்து இடம்பெறும் போது கவசம் கழன்று பறந்துவிடும். தலைக்கவசம் அணியாது தவிர்ப்பதற்கு இளைஞர்கள் கூறும் காரணம் வேடிக்கையானது. அதாவது கவசம் அணியும் போதும் கழற்றும் போதும் சிகையலங்காரம் கலைந்து விடுகிறது என்பதாகும். தலை வெளியே கலைந்து போனால் சீவிவிடலாம் உள்ளே கலங்கிப்போனால் வைத்தியர்களுக்கு தான் தலைவலி. 
 
எனவே அழகான வாகனங்கள் வைத்திருந்தால் மட்டும் போதாது (தலைக்கு) அளவான கவசங்களும் வைத்திருக்க வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான காப்புறுதியை வழங்கும். எல்லா அங்கங்களையும் மாற்றீடு செய்யும் முறை மருத்துவத்தில் உண்டு. ஆனால் மூளை மாற்றுச் சிகிச்சை இன்னமும் கண்டறியப்படவே இல்லை. எனவே உங்கள் மூளையை பாவித்து உங்களை நீங்களே  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  
 
 



--
With Regards,
S.Nirmal Ganesh