Thursday, September 8, 2011

உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம்


நமது அன்றாட உணவு, ஆரோக்கியமான உணவாய் அமைய எந்த மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற உதவிக்குறிப்பினைத் தரும் கூர்நுனிக்கோபுர வடிவ விளக்கப்படத்தினை உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் என்றழைக்கின்றோம். இதில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுவகைகள் கூர்நுனிக்கோபுரத்தின் அகன்ற அடிபாகத்தில் குறிபிடப்பட்டுள்ளது. கூர்மையான மேல்புறத்தில் மிகவும் குறைத்து உண்ணவேண்டிய உணவுவகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது அன்றாட உணவில் ஒரே மாதிரியான உணவு வகைகளைக் கொள்ளாமல், மாறுபட்ட வகைகளைச் சேர்த்து அதன்மூலம் நமக்கு தேவையான ஊட்டங்களையும், சக்தியையும் பெற இந்த உதவிப்படம் வழிகாட்டுகின்றது.


இந்த கூர்நுனிக்கோபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் ஆறு முக்கிய உணவு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1. தானிய உணவுகள்
2. காய்கறி உணவுகள்
3. பழ உணவுகள்
4. பால் உணவுகள்
5. இறைச்சி உணவுகள்
6. இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்

இந்த ஆறு வகை உணவுகளுமே மனிதனுக்கு மிகவும் அத்யாவசியமானதுதான் என்றாலும், தினசரி உணவில் எவை, எத்தனை பரிமாறும் அளவுகள் (Servings) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்குவதுதான் இந்த படத்தின் நோக்கம்.
குறுகிய முதல் நிலையில், மிகவும் குறைவாய் சாப்பிட வேண்டிய இனிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் வகை உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்க்கரை, வெண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் முதலியன இதில் அடங்கும். இவற்றில் சக்திகள் (Calories) அதிகம் உள்ளன மற்றபடி முக்கிய ஊட்டங்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன.
அடுத்த நிலையில் பொதுவாய் விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஒரு பிரிவிலும், முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றுமொரு பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை உணவுகளில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் மிகுதியாய் உள்ளன. இவை இரண்டு முதல் மூன்று பரிமாறும் அளவுகள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.
மூன்றாம் நிலையில் பொதுவாய் தாவரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் உணவுகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே கிடைக்கின்றது. இவை மூன்று முதல் நான்கு பரிமாறும் அளவுகள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது
இறுதி நிலையான அகன்ற அடிப்பாகத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டிய தானிய உணவு வகைகள் உள்ளன. அரிசி, கோதுமை மற்றும் ப்ரெட்(bread) போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இவற்றில் அடங்கும். ஐந்து முதல் 12 பரிமாறும் அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றது.

நன்றி - அறுசுவை.காம்